ஸ்தல வரலாறு

முக்கடல்களால் சூழப்பட்ட இந்தியாவின் தென் கோடியில், பண்டைய பழம்பெரும் துறைமுகமாம் கொற்கையின் அருகில் மாரமங்கலம் என்னும் ஊர். அதனுள் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு பெரியோர்களால் கேரள தேசத்து ஆரியங்காவு என்னுமிடத்தில் இருந்து (பிடி மண் மூலம்) அழைத்து வரப்பெற்று மூன்று புறமும் நெல், வாழை தோட்டங்களால் சூழப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி எம்பெருமான் மாரமங்கலம் மகாராஜாவாம் ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் வழிபடப்பட்டு வருகிறார். மேலும் நமது ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வனபத்திரகாளி அம்மன், ஸ்ரீ பொய் சொல்லா மெய்யன் சாஸ்தா, ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், ஸ்ரீ பிரம்மசக்தி, ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ சின்ன மகராஜா, ஸ்ரீ சத்திராதி முண்டன் சுவாமி, தாய் ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ வீர மனோகரி என்கிற வீரகாளி அம்மன்,  ஸ்ரீ பால சுடலை, பாண்டி முனி, ஸ்ரீ உச்சினி மாகாளி, ஸ்ரீ நாகாத்தம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் மகாராஜா ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து துன்புறும் மக்களுக்கு நல்ல வரம் தந்து அருள்பாலித்து வருகின்றனர். இவ்வாலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுபவர்களுக்கு பில்லி, சூன்யம், பேய், பிசாசு, போன்ற துன்பங்கள் நீக்கி அருள்பாலிக்கின்றனர். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை செல்வம் கொடுத்தும், வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல வேலை, தொழில், நிலையான செல்வத்தை கொடுத்தும் அருள்பாலிக்கின்றனர். வெண்புரவி ஏறி, வீச்சருவாள் கொண்டும் கையில் பொந்ததடியுடன் வரும் சுடலை ஈசன் எல்லோருக்கும் எல்லாமும் பெற்றிட ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 3 வது செவ்வாய்கிழமை பெரிய பூஜையை (கொடைவிழாவை) ஆனந்தமாய் ஏற்கும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

ஓம் சுடலை ஈஸ்வராய நமஹ என்ற மூல மந்திரத்தை கூறி மனதார வழிபாட்டு வருபவர்களுக்கு உடன் இருந்து அருள்பாலிக்கின்றார்.

வெள்ளை சாற்று

Image